இந்தியா

அச்சுதானந்தன் பிரசாந்த் பூஷன் சந்திப்பு

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனை, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரசாந்த் பூஷன் நிருபர்களிடம் கூறுகையில், “எங்களது பயணத் துக்கு அச்சுதானந்தனின் ஆதரவு, உதவி மற்றும் வழிகாட்டுதல்களை கோரினேன். இதற்காக அவரை எங்கள் கட்சிக்கு வந்துவிடுமாறு நான் கேட்டதாக கருத வேண்டாம்” என்றார்.

பூஷன் மேலும் கூறுகையில், “எங்கள் கட்சியின் நோக்கம், லட்சக் கணக்கான மக்கள் மத்தியில் அது ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தேன். எங்களின் புதிய கட்சிக்கு ஒத்தக் கருத்துடைய அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

பேச்சுவார்த்தை விவரம் குறித்து அச்சுதானந்தனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “பொதுவான அரசியல் விஷயங்கள் பேசப்பட்டது. அச்சு தானந்தன் தொடர்ந்த பொது நல வழக்குகள் குறித்த சட்ட விஷயங் களும் பேசப்பட்டது” என்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன் பிரசாந்த் பூஷனுக்கு கேரள வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட விருதை அச்சு தானந்தன் வழங்கினார். அப்போது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அமைச்சரவைக்கு அச்சுதானந்தன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அச்சுதானந்தனை கடந்த ஆண்டு சந்தித்த பிரசாந்த் பூஷன், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT