மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ஸ்மிருதி இராணியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், "சென்று வாருங்கள் ஸ்மிருதி இராணி" என கண்ணையா குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இராணியிடம் இருந்து அத்துறை பிரகாஷ் ஜவடேகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார், "ரோஹித் வெமுலாவுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் என்பது மட்டுமே தண்டனையாகிவிடாது. இருந்தாலும், சென்று வாருங்கள் ஸ்மிருதி இராணி. ரோஹித் வெமுலாவை துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதற்காக பண்டாரு தத்தேரயா சிறையில் அடைக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
கடந்த 2014 செப்டம்பர் மாதம் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். வெமுலா தற்கொலையைத் தொடர்ந்து ஸ்மிருதி இராணி மீதும் பண்டாரு தத்தாத்ரேயா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாடு தழுவிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.