தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அரிசி மீதான சேவை வரியை ரத்து செய்து, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று 2014-15 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, "அரிசியை சேமிப்புக் கிடங்குகளில் சேகரித்தல், சேமித்தல், மூட்டை கட்டுதல், ஏற்றி இறக்குதல் போன்றவற்றிற்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிதிச் சட்டம் 2012-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேளாண் பொருட்கள் பற்றிய விளக்கம் மற்றும் வரி விலக்கு பட்டியலுக்கேற்ப சேமிப்பு மற்றும் சேகரித்தல், சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில், அரிசி சேர்க்கப்படவில்லை. இப்பொழுது அரிசிக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்றார் ப.சிதம்பரம்.
முன்னதாக, அரசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தினார். நேற்று நடைபெற்ற திருச்சி மாநாட்டிலும் இது தொடர்பான தீர்மானத்தை திமுக நிறைவேற்றியது.
மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரிசி மீதான சேவை வரியை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இதே கோரிக்கையை அப்போது அவரிடம் முன்வைத்தார்.
இதேபோல், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் தொடர்ச்சியாக அரசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.