இந்தியா

உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: கிரிமினல் அரசியல்வாதி அன்சாரியுடன் சமாஜ்வாதி கூட்டணி

ஆர்.ஷபிமுன்னா

உபி சட்டப்பேரவை தேர்தலில் கிரிமினல் அரசியல்வாதியான முக்தார் அன்சாரியின் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் எனக் கருதப்படுகிறது.

உபியின் கிரிமினல்கள் பட்டியலில் இடம் பெற்றவர் முக்தார் அன்சாரி. உபி எம்.எல்.ஏவான இவர் கவுமி ஏக்தா தளம் எனும் பெயரில் ஒரு அரசியல் கட்சி நடத்தி வருகிறார். இவரது கட்சிக்கு மற்றொரு எம்.எல்.ஏவும் உபியில் இருக்கிறார். கொலை, ஆள்கடத்தல் மற்றும் மதக்கலவரம் தூண்டுதல் உட்படப் பல்வேறு குற்றங்களில் சிக்கிய அன்சாரி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களுக்கு கவுமி ஏக்தா தளத்தின் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதற்காக சிறப்பு அனுமதி பெற்று சிறையில் இருந்து வந்த முக்தார் அன்சாரி வாக்களித்து விட்டு சென்றார்.

இது குறித்து கவுமி ஏக்தா தளத்தின் தலைவரான அப்சல் அன்சாரி கூறுகையில், ‘உபி சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது அல்லது அதனுடன் நம் கட்சியை இணைக்கவும் எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் எதிர்துருவங்களாக இருந்த லாலுவும், நிதிஷ்குமாரும் ஒன்று சேரும் போது நாம் சமாஜ்வாதியுடன் இணைவதில் தவறு இல்லை. உபியில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க ஒருமித்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேர்வது அவசியம் ஆகும்.’ எனத் தெரிவித்தார்.

உபியில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாதியின் முன்னாள் மக்களவை உறுப்பினரான அப்சல்

அன்சாரி, முக்தார் அன்சாரியின் சகோதரர் ஆவார். 1996 ஆம் ஆண்டு அன்சாரி, முதன் முறையாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு மாவ் தொகுதியின் எம்.எல்.ஏவானார். பிறகு இருமுறை சுயேச்சையாக உபி சட்டப்பேரவை தேர்தலில் அதே தொகுதியில் வென்றார். கடந்த 2009-ல் கவுமி ஏக்தா தளம் எனும் பெயரில் புதிய கட்சியை துவக்கி அதன் சார்பில் 2012- உபியின் 43 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார் அன்சாரி. இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த முக்தார் அகமது அன்சாரியின் பேரன் ஆவார்

SCROLL FOR NEXT