இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம், இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் நட்புறவை வெளிப்படுத்துவதாக அமையும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் செல்கிறார். வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு மோடிக்கு ஒபாமா விருந்தளிக்கிறார்.
இந்நிலையில் பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் பயணம் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு வளர்ந்து வருவதையும் உலக அரங்கில் இரு நாடுகளும் இணைந்து தலைமையேற்று செயல்படுவதையும் வெளிப்படுத்துவதாக அமையும்.
அமெரிக்க – இந்திய உறவில் இந்தப் பயணத்தால் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படும். கடந்த 7 ஆண்டுகளில் அமெரிக்காவும் இந்தியாவும் நீடித்த நட்புறவுக்கு அடித்தளமிட்டுள்ளன. ஜனநாயக விழுமியங்களை கட்டமைத்துள்ளன. தடைகளற்ற சமுதாயம், சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்குக்கு மரியாதை ஆகியவற்றை பண்புகளாகக் கொண்டுள்ளன.
பருவநிலை மாற்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பது, தூய்மையான எரிசக்திக்கான தீர்வுகளை வழங்குவது, பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, இணைய உலகத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான கருவியாக பாதுகாப்பது, கடல், ஆகாயம் மற்றும் விண்வெளியில் நமக்கான இடங்களை பாதுகாப்பது என பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்போது, இந்த உலகம் இன்னும் சிறப்படையும்” என்றார்.
பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு உரையாற்றும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார். மேலும் சபாநாயகர் பால் ருயான் தலைமையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார்.
2014, மே மாதம் இந்திய பிரதமராக பதவியேற்ற மோடி, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஒபாமாவை முதல் முறையாக சந்தித்தார். அதன் பிறகு இரு தலைவர்களும் 6 முறை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் வெற்றியைத் தொடர்ந்து, அவரை வாழ்த்திய முதல் வெளிநாட்டுத் தலைவர் ஒபாமா ஆவார்.
இதனிடையே, சீனாவை சமாளிப்பதற்காக இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஒபாமா முயற்சி செய்வதாக அமெரிக்காவின் இரு முன்னணி நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் இப்பயணத்தின்போது இந்தியாவுடன் பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அந்நாளேடுகள் கூறுகின்றன.