இந்தியா

பயிர் கடன் தள்ளுபடி பற்றி மவுனம்: தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

காவிரி ஆணையம், வறட்சி நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வேளாண் கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசு நேற்று எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அதே சமயம் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை நேற்று கூடியதும் விவசாயிகளுக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலி யுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘இந்த விவகாரத்தை அரசு மிக கவனமாக அணுகி வருகிறது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த விவசாய பிரதிநிதிகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோர் சந்தித்து பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்துள்ளனர். அதன்படி வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

திமுக வலியுறுத்தல்

அதே சமயம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வி களுக்கு நிர்மலா சீதாராமன் எந்த பதிலும் அளிக்கவில்லை. முன்னதாக பூஜ்ய நேரத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா இந்த விவகாரத்தை எழுப்பினார். அவர் ‘‘வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் இதுவரை கடன் தொல்லை தாங்காமல் 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு ரூ.40,000 கோடி நிதியை விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். காவிரி ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு தொகை கிடைக்க ரூ.8,880 கோடி வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

விவசாயம் பாதிப்பு

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா, ‘‘நாடு முழுவதும் விவசாயம் கடுமையாக பாதிப் படைந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விவசாயிகள் கடும் வேதனையில் சிக்கி தவித்து வருகின்றனர். பிற துறைகளுக்கான கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளுக்கான கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய தயங்குகிறது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன், ‘‘தமிழகத்தில் குடிநீருக்கு கூட போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. கால் நடைகளும் தண்ணீர் மற்றும் தீவனம் இல்லாமல் பரிதவிக் கின்றன. எனவே விவசாயிகளை காப்பாற்றும் வகையில் பயிர் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

சீத்தாராம் யெச்சூரி பேசும் போது, ‘‘தமிழக விவசாயிகள் எலிக்கறி உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு விவசாயிகளுக்கு ஏன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது’’ என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT