இந்தியா

கத்தாரில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் 2 தமிழர்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய அரசு முடிவு

பிடிஐ

கத்தாரில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழர்களைக் காப்பாற்ற கருணை மனுத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்ரமணியம் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் இருவரும் பணியாற்றுவதற்காக கத்தார் நாட்டுக்கு சென்றிருந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 3-வது குற்றவாளியான சிவகுமார் அரசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில் சுப்ரமணியம், செல்லதுரை பெருமாளின் குடும்பத்தினர் அவர்களைக் காப்பாற்றும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருவரது குடும்பத்தினரும் கத்தார் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உதவியாக ரூ.9.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்திய தூதரகம் சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அண்மையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிவகுமார் அரசனுக்கு விதித்த ஆயுள் தண்டனையை மட்டும் 15 ஆண்டுகளாக குறைத்து விட்டு, சுப்ரமணியம் மற்றும் பெருமாளின் தண்டனையை குறைக்க மறுத்து விட்டது.

இதையடுத்து இருவரது குடும்பத்தினர் சார்பில் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் கடிதம் எழுதி, சுப்ரமணியம் மற்றும் பெருமாளை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழக்கு விவரங்களை அளிக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டிருந்தார். அண்மையில் இந்த விவரங்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து சுப்ரமணியம் மற்றும் பெருமாளை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு சார்பில் கத்தார் அரசிடம் கருணை மனுத் தாக்கல் செய்யப்படும் என நேற்று தெரிவித்தார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘சுப்ரமணியம் மற்றும் பெருமாளின் குடும்பத்தார் சார்பில் கத்தார் அரசிடம் கருணை மனுத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசும் வேண்டிய உதவிகளை வழங்க முன் வரவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

மாலுமிகளை மீட்க நடவடிக்கை

இதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மனில் வியாபாரிகள் கப்பலில் சிக்கியுள்ள 41 இந்திய மாலுமிகளை மீட்பதற் கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருப்பதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அந்த கப்பலில் கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், பிஹார், உத்தராகண்ட், டெல்லி, பஞ்சாப், தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த மாலுமிகள் 41 பேர் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT