ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது டெல்லி பெருநகர போலீஸார் பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. தினேஷ் மோகானியா பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பெண் ஒருவர் பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் மாண்பினை சீர்குலைகும் வகையில் நடந்து கொண்டதாக பிரகாஷ் ஜார்வால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து 'தி இந்து' (ஆங்கில நாளிதழுக்கு) பிரகாஷ் ஜார்வால் அளித்த பேட்டியில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீதான புகாருக்குப் பின்னணியில் அரசியல் ஆதாயம் தேடும் சிலர் இருக்கின்றனர். அந்தப் பெண் கடந்த ஜூன் 2-ம் தேதி டெல்லி குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
அன்றைய தினம் அலுவலக திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது. எனவே ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அந்தப் பெண் என்னிடம் தங்கள் பகுதிக்கு குடிநீர் லாரி அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். என்னால் முடிந்ததை செய்கிறேன் எனக் கூறிச் சென்றேன். ஆனால் அந்தப் பெண் அவரை நான் தரக்குறைவாக பேசியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வாறாக நான் அவரைப் பேசியிருந்தால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதை நிச்சயமாக செய்தியாக்கியிருப்பார்கள். எனவே, அவர் கூறுவது போலிக் குற்றச்சாட்டு. மேலும், அந்தப் பெண் சில காலமாக பாஜகவில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறார். என் மீதான குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது" என்றார்.