இந்தியா

பாகிஸ்தான் நல்ல நாடா?- ரம்யா கருத்துக்கு கண்டனம்: பெங்களூரு, மைசூருவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இரா.வினோத்

பாகிஸ்தான் நல்ல நாடு என கருத்து தெரிவித்த நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான‌ ரம்யாவை கண்டித்து கர்நாடகாவில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா அண்மையில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானில் நடைபெற்ற ‘சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதா ரணமாக வாழ்கின்றனர். இந்தியா வில் இருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறிய‌து போல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது’’ என தெரிவித்திருந்தார்.

நடிகை ரம்யாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித் துள்ள கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டன.

பெங்களூருவில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் கன்னட நடிகரும், பாஜக பிரமுகருமான ஜக்கேஷ் பங்கேற்றார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய ஜக்கேஷ், ‘‘ரம்யாவின் கருத்து காங்கிரஸின் நாட்டுப்பற்று என்னவென்பதை தெளிவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் நல்ல நாடு என நற்சான்றிதழ் வழங்கியுள்ள ரம்யா காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியை அங்கு குடியேற சொல்வாரா?’’ என்றார்.

ரம்யா பதிலடி

இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா, ‘‘அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாகிஸ்தான் நம்முடைய சகோதர நாடு என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது பாகிஸ்தான் சென்று வருகிறார். எனக்கு எதிராக போராடும் பாஜகவினர், மோகன் பகவத் மற்றும் மோடிக்கு எதிராகவும் போராடுவார்களா?’’ என எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT