டீசல் விலையை அரசே நிர்ணயிப்பது என்கிற கட்டுப்பாடு 6 மாதத்தில் விலக்கிக்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதனால் டீசல் விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற எரிசக்தி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற மொய்லி, இன்னும் 6 மாதத்தில் டீசல் விலை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும். இதற்காக படிப்படியாக விலை உயர்த்தப்படும்.
இப்போது மாதம்தோறும் 50 பைசா விலை உயர்த்தப்படுவதால், டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டம் லிட்டருக்கு ரூ.2.50 மட்டும் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகக் குறைந்ததால் ஒரு லிட்டருக்கு நஷ்டம் ரூ.14 என்ற அளவில் இருந்தது. இப்போதைய நிலையில் ஒரு லிட்டருக்கு நஷ்டம் ரூ.9.28 ஆக உள்ளது. எனினும் மாதம்தோறும் ரூ.50 பைசா மட்டுமே விலை உயர்த்தப்படும். 3 ரூபாய், 4 ரூபாய் என்று அதிக அளவில் விலையை உயர்த்தும் திட்டமில்லை என்றார்.
நாட்டில் 95 சதவீத பெட்ரோல் பங்குகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம்தான் உள்ளன. அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் இப்போது டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டீசல் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி முதல் மாதம்தோறும் டீசல் விலையை 50 பைசா உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அரசு கூறுவதுபோல டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டம் முழுமையாகக் குறைய இன்னும் 18 மாதங்கள் வரை ஆகும்.
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவது போன்றவற்றை சுட்டிக்காட்டி டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டம் முழுமையாகக் குறையும் என நம்புவதாக மொய்லி தெரிவித்துள்ளார்.