இந்தியா

சாலை விபத்துகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி கோவை டாக்டர் மனு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சாலை விபத்துகளைத் 'தேசியப் பேரிடராக' அறிவித்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கோயமுத் தூரைச் சேர்ந்த எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். ராஜசேகரன் இந்த பொதுநலன் கோரும் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா அடங்கிய 'பெஞ்ச்' இந்த மனுவைத் திங்கள்கிழமை விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா வழக்கு விசாரணையில் பங்கேற்றார்.

ஏராளமானோரின் உயிர்களைப் பலி வாங்கிவரும் இந்த விபத்துகளைத் தடுப்பதற்கான யோசனைகளை நீதிமன்றத்தில் எழுத்துமூலம் அளிக்குமாறு கோரிய பெஞ்ச், அதற்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது. மனு மீது பிறகு ஆணை பிறப்பிப்பதாகத் தெரிவித்தது. பெருகிவரும் சாலை விபத்துகள் தொடர்பாக 2012-ல் ஒரு மனு தாக்கல் செய்த பிறகு இதுநாள் வரையில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் நாடு முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்திருப்பதை கிருஷ்ணகுமார் சுட்டிக்காட்டினார். 4 லட்சம் பேர் ஏதாவது ஒரு உறுப்பை இழக்கின்றனர், சுமார் 10 லட்சம் பேர் நிரந்தர ஊனமுற்று தங்களுடைய குடும்பத்தினரைக் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை விவரித்தார்.

விபத்துகளைத் தடுக்க யோசனை கூறவும், நடவடிக்கை எடுக்கவும் இதற்கு முன்னாலும் ஏராளமான கமிட்டிகள் போடப்பட்டாலும் கண்காணிப்பும் சாலை விதிகளைக் கண்டிப்புடன் அமல் செய்வதும்தான் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட் டிலும் கண்காணிப் பிலும் “சாலை பாதுகாப்புக்கான மத்திய வாரியம்” அமைக்கப்பட வேண்டும், சாலை பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலவரம்பு நிர்ணயித்து அரசு அமைப்புகள் அதனிடம் தகவல் அளிக்க வேண்டும் என்று கோரினார்.

ஒவ்வொரு 4 நிமிஷங்களுக்கொருமுறை ஒரு விபத்து நடக்கிறது, ஒவ்வொரு நிமிடமும் 4 பேர் விபத்தில் சிக்கி செயலிழக்கின்றனர், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3% அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது, விபத்து ஏற்பட்ட உடனேயே அளிக்கும் சிகிச்சைக்காகவே சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது, உடல் ஊனம் அடைவதால் கோடிக்கணக்கான ரூபாய் தேசிய இழப்பு ஏற்படுகிறது. இந்தக் காரணங்களால் சாலை விபத்துகளை தேசியப் பேரிடராகவே கருத வேண்டும். அரசு அமைப்புகளுக்கிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாததால் சாலை பாதுகாப்புக்

கான சட்டங்கள் திறமையற்ற வகையில் அமல் செய்யப்படு கின்றன. மக்களிடையே சாலை விதிகள் குறித்து போதிய விழிப் புணர்ச்சி இல்லாததாலும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லாததாலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மக்களுடைய உயிருக்கு உத்தரவாதம் அளிக்கிறது அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு. விபத்துகள் அதை செல்லாததாக்கிவிடுகின்றன.அரசின் பல்வேறு அமைச்சகங் களுக்கிடையே போதிய விழிப்புணர்வும் ஒருங்கிணைப்பும் இல்லாததால் தேவையற்ற உயிரிழப்புகளும் மனித உழைப்பு விரயங்களும் ஏற்படு கின்றன. இதனால் வளரும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது என்று மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.

டாக்டர் ராஜசேகரன் பேட்டி

“உலகில் சாலை விபத்துக்களில் மரணமடைவோர், காயமடைவோர், ஊனமுறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டி ருக்கிறது. வெளிநாடுகளில் சாலை விபத்துக்களில் பாதிக்கப் படுவோரை காப்பாற்றும் பொறுப்பும் செலவுகளும் அரசைச் சார்ந்தது என்பதால், அவை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துக்களைக் குறைத்துள்ளன. இந்தியாவில் விபத்துக்களில் பாதிப்புக் குள்ளாவோர் பெரும்பாலும் தனியார் மருத்துவர்களிடமே செல்கின்றனர். இந்த விஷயத்தில் அரசு அக்கறை கொள்வதாகத் தெரிவ தில்லை. அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால் சாலைகளைச் சரிசெய்ய வேண்டும். அதில் குன்றுகள் இருத்தலாகாது. போக்குவரத்து ஒழுங்கு காப்பாற்றப் படவேண்டும். இங்கே சாலை போடுவது நெடுஞ்சாலைத்துறை என்றால் அதில் மின்சாரக் கம்பங்கள் போடுவது மின்வாரியத்துறை. சாலையைப் பராமரிப்பது இன்னொரு துறை. எனவே ஒருங்கிணைப்பும் அக்கறையும் இருப்பதில்லை. அதனால்தான் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் மக்கள் இறக்கின்றனர். ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் முதல் உலக யுத்தத்தில் கூட இறக்கவில்லை. சுனாமியில் கூட 9 ஆயிரம் பேர்தான் இறந்தனர். ஆனால் சாலை விபத்தில் 10 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் இறக்கிறார்கள். 40 ஆயிரம் பேர் கை, கால்களை இழந்து முடமாகிறார்கள்.

“திருமணமாகி ஒரு வாரமேயான மணப்பெண் கணவனை இழப்பது, ஒரே பையனை வைத்துள்ள பெற்றோர் தன் வாரிசை இழப்பது, குழந்தை மட்டும் இருந்து பெற்றோர்களை இழந்து குழந்தை தவிப்பது எல்லாமே தினம் தினம் கண்டு மனம் நொந்துபோன மருத்துவர் நான். பார்த்துப் பார்த்து மனம் புழுங்குவதை விட இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றே 18 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் சென்றேன் . நீதியரசர்கள் முன் இந்த விஷயத்தை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த விபத்துக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் செய்துள்ளது. அடுத்தது உறுதிப்பாடான ஒரு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று டாக்டர் ராஜசேகரன் எமது நிருபர் கா. சு. வேலாயுதத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT