இந்தியா

டெல்லியில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

டெல்லியில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடப் பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டுத் தயாரிப்பு உட்பட 444 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங் களிலிருந்து டெல்லிக்கு அதிக அளவு கள்ளத் துப்பாக்கிகள் அனுப்பப்படுகின்றன. தவிர, ஜெர்மன் மற்றும் அமெரிக்காவில் தயாரிக் கப்பட்ட துப்பாக்கிகளும் பாகிஸ் தான் வழியாக டெல்லிக்கு கடத் தப்படுவதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் நடப்பாண்டு கடந்த ஆகஸ்ட் வரை கள்ளத் துப்பாக்கிகள் தொடர்பாக 398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 811 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு வரை கைப்பற்றப்பட்ட கள்ளத்துப்பாக்கிகளை விட நடப் பாண்டு 20 கள்ளத்துப்பாக்கிகள் கூடுதலாக கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து டெல்லி காவல் துறை அதிகாரிகள் `தி இந்து’விடம் கூறியதாவது:

“நாடு முழுவதிலும் கிரிமினல் கள், குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கள்ளத்துப்பாக்கி வாங்குபவர்கள் வழக்கமாக ஒருமுறைக்கு ஒரு குண்டு மட்டும் போட்டு சுடும் உள்ளூர் வகை துப்பாக்கிகளையே அதிகம் வாங்கி வந்தனர். தற்போது ஏகே-47 உட்பட வெளிநாட்டு தயாரிப்புகளும் கள்ளச் சந்தையில் கிடைக்கின்றன” என்றனர்.

கடந்த ஆண்டு கள்ளத்துப்பாக்கி களில் பயன்படுத்தும் 5,153 குண்டு கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரை 6,553 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தில்தான் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பு அதிகம். தற்போது இத்தொழில் மேலும் இரு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அலிகர், மீரட் மாவட்டங்கள் கள்ளத் துப் பாக்கி தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. பிஹாரில் முங்கேர் மாவட்டத்தில் ஏ.கே.47 போன்ற கனரக துப்பாக்கிகளும் தயாரிக்கப்படுகின்றன.

வாடகைக்கு துப்பாக்கிகள்

கள்ளத் துப்பாக்கி பயன்படுத் தும் பெரும்பாலான கிரிமினல் களின் முக்கிய தொழில் பணத் திற்காக ஆட்களைக் கொல்வது தான். டெல்லி மற்றும் அதன் சுற்றுப் புற மாநிலங்களான ஹரியாணா, உபியில் இவ்வகைக் குற்றங்கள் அதிகம். கடந்த 2013-ல் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தீபக் பரத்வாஜ் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்காக ரூ.6 கோடி கைமாறியதாகக் கூறப்படுகிறது. பணத்துக்காக ஆட்களைக் கொலை செய்பவர்கள் வாடகைக்குத் துப்பாக்கிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். துப்பாக்கிகளை வாடகைக்கு விடும் தொழில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT