இந்தியா

அத்துமீறிய சாமியாருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த சட்ட மாணவி

என்.சுவாமிநாதன்

கேரள மாநிலம், திருவனந்தபுரத் தில் தன்னிடம் அத்துமீறிய சாமியார் ஒருவருக்கு, சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த தண்டனை ஒட்டு மொத்த கேரள மாநிலத்தையும் பரபரப்பாக்கியுள்ளது.

கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் கங்கேசானந்தா தீர்த்த அடிகளார் என்ற ஸ்ரீஹரி சுவாமி (54). சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் உள்ள கண்ணன்மூளை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவரை தனது பூஜை, இறை வழிபாட்டின் மூலமாக குணப்படுத்துவதாக சொல்லி அந்த வீட்டுக்கு சென்ற ஸ்ரீஹரி சுவாமி குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகினார். முதலில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவியை தனது வலைக்குள் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் 12-ம் வகுப்பு படிக்கும் மகளிடமும் அத்துமீறி நடந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தற்போது 23 வயதாகும் அந்த மாணவி சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவும் ஸ்ரீஹரி சுவாமி அத்துமீறவே, அந்த மாணவி கத்தியினால் சாமியாரின் பிறப்புறுப்பை வெட்டினார்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சாமியார் அனுமதிக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து பேட்டை போலீஸார் விசாரித்து, ஸ்ரீஹரி சுவாமி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டக் கல்லூரி மாணவியின் புகாரின்பேரில் அவரது தாயாரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள் ளார்.

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர், சட்டக் கல்லூரி மாணவி மிகவும் தீரமான முடிவு எடுத்துள்ளார். அவரை பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரி சுவாமி, போலீஸாரிடம், தன் பிறப்புறுப்பை தானே அறுத்துக் கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டீக்கடையில் இருந்து...ஸ்ரீஹரி சுவாமியின் சொந்த ஊர் எர்ணாகுளம் அருகில் உள்ள கோலஞ்சேரி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே, அங்கு இருந்து கொல்லத்துக்கு சென்றார். அங்குள்ள பன்மனை பகுதியில் சட்டம்பி சுவாமி சமாதி உள்ளது. அங்கு தன்னை சாமியாராக பிரகடனப்படுத்திக் கொண்டு ஆன்மீகப் பயணத்தை தொடங்கினார்.

சட்டம்பி சுவாமி கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம், கண்ணன்மூளை பகுதியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அவர் பிறந்த பகுதியாக கருதப்படும் இடம், பலரது கைமாறி கடைசியில் கேரள ஏடிஜிபி சந்தியாவின் கைக்கு வந்தது. அவர் அதில் கட்டிடம் கட்ட முயன்றபோது, அதை எதிர்த்து ஸ்ரீஹரி சுவாமி தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது கண்ணன்மூளையில் போராடச் சென்ற இடத்தில்தான், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டில் 120 தனியார் கோயில் களை கேரள தேவசம்போர்டு எடுக்க முனைந்தபோது அதை எதிர்த்து இந்து ஐக்கிய வேதி அமைப்பின் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது அந்த அமைப்பின் தலைவராக, தற்போதைய கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் இருந்தார். அவருடன் சேர்ந்து ஸ்ரீஹரி சுவாமியும் போராட்டம் நடத்தினார். கேரள மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் இவர் ஆன்மிகப் பேச்சாளராகவும் சொற்பொழிவு ஆற்றி வந்துள்ளார்.

SCROLL FOR NEXT