இந்தியா

மகாராஷ்டிராவில் விஷ ஊசி போட்டு 6 பேரை கொலை செய்த டாக்டர் கைது

ஐஏஎன்எஸ், பிடிஐ

மகாராஷ்டிரத்தில் அங்கன்வாடி ஊழியரை கடத்திச் சென்று கொலை செய்ததாக 42 வயது டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் 4 பெண்கள் உட்பட மேலும் 5 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சட்டாரா மாவட்டத்தில் வை என்ற சிறிய மலையடிவார நகரம் உள்ளது. இங்கு மங்கலா ஜேதி (47) என்ற அங்கன்வாடி பெண் ஊழியர் கடந்த ஜூன் 16-ம் தேதி காணாமல்போனார். புனே நகரில் தனது மகளின் பிரசவத்துக்கு செல்வதாக கூறிச் சென்றவர் அங்கு போய் சேரவில்லை.

இது தொடர்பான போலீஸ் விசாரணையில், அதே நகரை சேர்ந்த சந்தோஷ் பால் என்ற டாக்டருடன் மங்கலா ஜேதிக்கு தகாத உறவு இருந்தது தெரியவந்தது. மேலும் சமீபத்தில் சந்தோஷ் பாலை, அவரது கிரிமினல் நடவடிக்கைகளை வெளியே கூறிவிடுவேன் என மங்கலா ஜேதி மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து சந்தோஷ் பாலை கடந்த 11-ம் தேதி மும்பையில் கைது செய்த போலீஸார், பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

சந்தோஷ்பால்

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் நேற்று கூறியதாவது:

டாக்டர் சந்தோஷ் பாலுக்கு மங்கலா ஜேதி மட்டுமின்றி அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஜோதி மந்த்ரே என்ற நர்ஸுடனும் தகாத உறவு இருந்துள்ளது. சந்தோஷ் பால் ஜோதி மந்த்ரே இடையிலான உறவு மங்கலா ஜேதிக்கு தெரிய வந்து அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இதை வெளியில் சொல்லி விடுவேன் என மங்கலா ஜேதி மிரட்டியதால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 16-ம் தேதி மங்கலா ஜேதி தனது மகள் வீட்டுக்கு செல்ல, வை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு ஜோதி மந்த்ரேவுடன் காரில் வந்த சந்தோஷ் பால், மங்கலா ஜேதியை 13 கி.மீ. தொலைவில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு கடத்திச் சென்று அடைத்துள்ளார். மறுநாள் விஷ ஊசி போட்டு மங்கலா ஜேதியை இருவரும் கொலை செய்து தோட்டத்தில் புதைத்துள்ளனர். பிறகு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

பண்ணை தோட்டத்தில் இருந்து மங்கலா ஜேதியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் கடந்த 2003 முதல் 2016 வரை 4 பெண்கள் உட்பட மேலும் 5 பேரை சந்தோஷ் பால் கொலை செய்ததாக கூறி எங்களை திடுக்கிட வைத்துள்ளார். இதில் 4 பெண்களை தனது பண்ணை வீட்டில் புதைத்ததாக கூறினார். இவற்றின் எலும்புகளையும் தோண்டி எடுத்துள்ளோம். மேலும் கொல்லப்பட்ட ஆணின் உடலை அருகில் உள்ள அணையில் வீசியதாக கூறியுள்ளார். இவர்கள் 5 பேரையும் காணவில்லை என ஏற்கெனவே புகார் பதிவாகி யுள்ளது. விரிவான விசாரணைக்கு பிறகே இது தொடர்பான தகவல் கள் தெரியவரும்.பெண்கள் மீதான மோகம், பணம், நகை மீதான ஆசையே சந்தோஷ் பாலின் குற்றங்களுக்கு காரணம். அவரது குற்றச் செயல்களை வெளியே கூறிவிடுவேன் என சம்பந்தப் பட்டவர்கள் மிரட்டத் தொடங்கிய வுடன் தனது மருத்துவ அறிவை தவறான வழியில் பயன்படுத்தி அவர்களை கொலை செய்துள்ளார்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

முன்னதாக மங்கலா ஜேதி காணாமல் போன வழக்கை மாநில சிஐடி போலீஸார் விசாரிக்க வேண் டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வழக்கை விரைவு படுத்திய போலீஸார் முதலில் நர்ஸ் ஜோதி மந்த்ரேவை கைது செய்த னர். அவர் அளித்த தகவலின் பேரிலேயே மும்பையில் பதுங்கி யிருந்த சந்தோஷ் பாலை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT