தனது கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவரை ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அவரது வீட்டில் சந்தித்தார். அவரைத் தான் மன்னித்து விட்டதாக கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு டெல்லி தொகுதியின் சுல்தான்புரியில் இறுதிநாள் தேர்தல் பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு மாலை அணிவித்த லாலி(38) என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.
இதனால், லாலியை அடித்து உதைத்த ஆம் ஆத்மி கட்சியினர், போலீஸில் ஒப்படைத்தனர். கேஜ்ரிவால் வழக்கு தொடுக்க விரும்பாததால் லாலி விடுவிக்கப் பட்டார். இந்நிலையில், டெல்லி அமன் விஹாரில் வசிக்கும் லாலியின் வீட்டிற்கு திடீர் என விஜயம் செய்தார் கேஜ்ரிவால். அவருடன் டெல்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
அருகில் அமர்ந்து பொறு மையுடன் பேசிய கேஜ்ரிவாலிடம், கண்கலங்க இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டார் லாலி. பாதங் களிலும் விழுந்த மன்னிப்பு கேட்க முயன்றவரை தடுத்த கேஜ்ரிவால், செய்தியாளர்களிடம் லாலியை மன்னித்துவிட்டதாகக் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய லாலி, ‘நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அவர் எனக்கு ஒரு கடவுளை போல. 49 நாள் ஆட்சிக்கு பின் அவர் ராஜினாமா செய்தது எனக்கு ஆத்திரமூட்டியது’ என்றார். இந்த சம்பவம் குறித்து பாஜக டெல்லி தேர்தல் பொறுப்பாளர் வி.கே.மல்ஹோத்ரா ‘தி இந்து’ விடம்’ கூறுகையில், ‘இவை எல்லாம் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். சரியாக மக்களவை தேர்தல் பிரச்சா ரத்தின் போது, கேஜ்ரிவால் மீது மட்டும் தாக்குதல்கள், நடத்தப்படுவது சந்தேகம் கொள்ள வைக்கிறது’ என்றார்.
டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாசியை சந்தித்த கேஜ்ரிவால் அவரிடம் தன் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக் கும்படி கோரினார்.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
லாலியிடம் கன்னத்தில் அறை வாங்கிய பின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்ற கேஜ்ரிவால், அங்கு தம் தொண்டர்களுடன் மௌனப் பிரார்த்தனை நடத்தினார். இதற்காக, அங்கு சட்ட விரோதமாக, அனுமதி இன்றி கூட்டம் சேர்த்ததாக டெல்லி தேர்தல் ஆணையம் கேஜ்ரிவாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.