இந்தியா

மீரா குமாரின் சொத்து ரூ.36 கோடி

செய்திப்பிரிவு

பிஹார் மாநிலம் சசராம் (தனி) தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தலைவர் மீரா குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ரூ.36 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2009-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகக் கூறியிருந்தார். அவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் மூன்றரை மடங்கு அதிகரித்து ரூ.36.49 கோடியாக உள்ளது. அவர் வைத்திருந்த நகைகள், வீ டுகளின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதே, இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு பாட்னா மற்றும் டெல்லியில் வீடுகள், பங்களாக்கள், பிளாட்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.34 கோடி.

நகை உள்ளிட்ட அசையும் சொத்து ரூ.1.57 கோடி, வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.1.46 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார். மீரா குமார் 2013 2014ம் நிதியாண்டில் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில், தனக்கு ஆண்டுக்கு ரூ.56.46 லட்சம் வருமானம் வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் கணவர் மஞ்சுள் குமாருக்கு அசையும், அசையா சொத்துகளாக ரூ.1.97 கோடி, வங்கி வைப்புத்தொகையாக ரூ.50 லட்சம், டெல்லியில் வீடு, இரண்டு கார்கள் உள்ளதாக மீரா குமார் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT