இல்லத்தரசிகளின் சேவை என்பது ஒரு திறமைசாலியின் பணிக்கு ஒப்பானது என, தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. வாகன விபத்தில் ஒரு பெண் அவரது காலை இழந்த வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்துக்கு நஷ்டஈடு கோரும் தீர்ப்பாயம் இந்தக் கருத்தை கூறியுள்ளது.
டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு பெண், தனது 6 மாதக் குழந்தையுடன் சாலையைக் கடக்க முயன்றபோது, வாகன விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், தனது வலது காலை இழந்தார். குழந்தையும் காய மடைந்தது.
இந்த விபத்துக்கு நஷ்டஈடு கேட்டு, அப்பெண் தரப்பில் மோட்டார் வாகன விபத்துக்கான நஷ்டஈடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.30.63 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குழந்தைக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டது.
நஷ்டஈட்டுத் தொகையை வாகனத்துக்கான காப்பீடு நிறுவனம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. மேலும், “இல்லத்தரசிகளின் சேவை என்பது திறமைசாலி ஒருவரது பணிக்கு ஒப்பானது. எனவே, காலை இழந்த அவருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். காலை இழந்ததன் மூலம் அவர் 80 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்தித்திருந்தாலும், ஒட்டுமொத்த உடலில் 40 சதவீதம் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.