கர்நாடக அமைச்சருடன் மோதல் போக்கை கடைபிடித்த பெண் போலீஸ் டிஎஸ்பி அனுபமா ஷெனாயின் ராஜினாமா கடிதத்தை கர்நாடக அரசு நேற்று ஏற்றுக்கொண்டது.
கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்குடன் கூட்லகி டிஎஸ்பி அனுபமா ஷெனாய் கடந்த 6 மாதங்களாக மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
மதுக்கடை ஆக்கிரமிப்பு விஷ யத்தில் டிஎஸ்பி அனுபமா எடுத்த நடவடிக்கையால் அமைச்சருடன் மோதல் முற்றியதாக கூறப்படு கிறது. இதனால் இரு முறை அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எனவே ஆத்திரம் அடைந்த அனுபமா ஷெனாய் தனது பேஸ்புக் பக்கத்தில் அமைச்சருக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி தனது டிஎஸ்பி பதவியை அனுபமா ஷெனாய் திடீரென ராஜினாமா செய்தார். ஆனால் உரிய விளக்கம் அளிக்காமல் ராஜினாமாவை ஏற்க முடியாது என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக நேற்று முன்தினம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அனுபமா ஷெனாயின் ராஜினாமா ஏற்கப் பட்டதாக கர்நாடக அரசு சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பாஜக தலைவர் களின் தூண்டுதல் காரணமாகவே, அமைச்சர் பரமேஷ்வருடன், அனுபமா மோதல் போக்குடன் நடந்து கொண்டதாக அம்மாநில உளவுத் துறை அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.