புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரில் கடந்த எட்டு மாதங்களில் 14 மாலுமிகள் உள்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல் குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். இதுவரை இந்த மோதலில் 14 மாலுமிகள் உள்பட 22 இந்தியர்களை இழந்துள்ளோம். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்ய, அவர்களுடன் அரசு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது.
இஸ்ரேலுடன் இந்தியா நல்ல, வலுவான உறவைக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் இந்த உறவை மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் பாடுபடுவோம். அங்கு தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, என்ன முடிவுகள் வெளிவருகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவரும் பிற உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துத் தாக்கியதுடன், உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்தையும் கட்டுப்படுத்தியது.
இஸ்ரேலின் அரசியல் தலைமைக்கும் அதன் வெளிநாட்டு உறவுகளுக்கும் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் உலகளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. பாதுகாப்பு, வர்த்தகம், வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவும் இஸ்ரேலும் தொடர்ந்து கூட்டுறவு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது