உதம்பூர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ராம்நகரிலிருந்து உதம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, காலை சுமார் 10 மணியளவில், வளைவு ஒன்றில் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, மலையோரப் பள்ளத்தாக்கில் விழுந்தது.
இவ்விபத்தைத் தொடர்ந்து, ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் இணைந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த பல பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்; இவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்
இந்த விபத்து குறித்துப் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “துயரம் நிறைந்த இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு உறுதுணையாக நிற்கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.