மக்களவையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் அவசர கூட்டத்தை திங்கள்கிழமை (பிப்ரவரி 17) நடத்துமாறு மீரா குமார் அறிவுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி., ராஜகோபால், கடந்த வியாழக்கிழமை தெலங்கானா மசோதாவுக்கு எதிராக ரகளையில் ஈடுபட்டார்.
மிளகுப்பொடி திரவத்தை ஸ்பிரே செய்ததில் உறுப்பினர்கள் பலருக்கு தும்மல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினரான வேணுகோபால் மக்களவைச் செயலாளர் முன்பிருந்த மைக்கை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.
இந்த சம்பவங்களுக்கு மத்திய அமைச்சர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் ராஜகோபால் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் மனு அளிக்கப் போவதாக தெலங்கானா பகுதியை சேர்ந்த எம்.பி., பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவற்றை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் எடுத்து வருவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களவைத் தலைவர் மீரா குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் வியாழக்கிழமை நிகழ்ந்த சம்பவங் களை அடுத்து, பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் அவசர கூட்டத்தை திங்கள்கிழமை நடத்துமாறு மீரா குமார் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவக்கப்ட்டுள்ளது.
மக்களவை துணைத் தலைவர் கரிய முண்டா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப் படும்.
குறிப்பாக உறுப்பினர்களை சோதனையிட்டு அவைக்குள் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப் படும் எனத் தெரிகிறது.