இந்தியா

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மருத்துவமனையில் அனுமதி

கே.கே.மகேஷ்

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை விஜயவாடாவில் திடீர் என உடல் நலம் குன்றியது.

இதனைத் தொடர்ந்து அவர், அங்குள்ள ஆந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சி மடத்தில் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் அடைந்தார்.

உடனடியாக அங்கிருந்த மட உதவியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் (ஐ சி யு) அனுமதிக்கப்பட்டார். உடனடியாக டாக்டர் ரவிராஜு தலைமையில் மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன் பின்னர் டாக்டர் ரவிராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது: ஜெயேந்திரருக்கு பிளட் சுகர், சோடியம் அளவு குறைந்துள்ளது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. சிடி ஸ்கேன் போன்றவையும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. மாலை வரை அவர் ஐசியு வில் கண்காணிக்கப்படுவார். பின்னர் அவரது உடல் நலம் தேறியதும் வார்டு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் ரவிராஜு கூறினார். ஜெயேந்திரருக்கு உடல் நலம் குன்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் மருத்துவமனை முன் கூடினர். பின்னர் அவர்கள் ஜெயேந்திரர் உடல் நலம் சீராக வேண்டுமென பிராத்தனையில் ஈடுபட்டனர்.

ஜெயேந்திரர் கடந்த ஆண்டு, ஆந்திராவில் நடைபெற்ற கோதாவரி புஷ்கரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ணா புஷ்கரத்திலும் பங்கேற்றார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜெயேந்திரர் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT