இந்தியா

லக்னோவில் 12 மணிநேர முற்றுகை முடிவுக்கு வந்தது: ஐ.எஸ். தீவிரவாதி சுட்டுக்கொலை

ஐஏஎன்எஸ், பிடிஐ

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் அவர் பதுங்கியிருந்த வீட்டில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரை உயிருடன் பிடிப்பதற் காக போலீஸார் மேற்கொண்ட 12 மணி நேர நடவடிக்கை இதன்மூலம் முடிவுக்கு வந்தது.

உ.பி.யின் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் போபால் உஜ்ஜைன் இடையிலான பாசஞ்சர் ரயிலில் நேற்று முன்தினம் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி, லக்னோ நகரில் பதுங்கியிருப்பதாக உ.பி. போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. இதன்பேரில் லக்னோவின் தாகூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டை பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் படையினர் நேற்று முன்தினம் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாருக்கும் தீவிரவாதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதியை சரண் அடையுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். இதை அவர் ஏற்காததால் அவரை வீட்டில் இருந்து வெளியே வரச்செய்யும் முயற்சியாக கண்ணீர் புகைக் குண்டு, மிளகாய் குண்டும் வீசினர்.

தீவிரவாதியை உயிருடன் பிடிக்க போலீஸார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். இம்முயற்சி பலன் அளிக்காததால் நேற்று அதிகாலை 3 மணியளவில் அதிரடியாக வீட்டின் உள்ளே புகுந்தனர்.

இதுகுறித்து போலீஸ் ஐஜி அசீம் அருண் கூறும்போது, “தீவிரவாதிக்கு எச்சரிக்கை விடுத்த பின் கமாண்டோ போலீஸார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். வீட்டின் 2 அறைகளில் சோதனையிட்டபோது தீவிரவாதி இறந்து கிடந்தார். இவர் சைஃபுல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஐ.எஸ். அமைப்பின் குரசான் குழுவைச் சேர்ந்தவர். அந்தக் குழுவின் தீவிர உறுப்பினர். வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி, சுழற்துப்பாக்கி, கத்தி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

ஐ.எஸ். தீவிரவாதி நேற்று கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் விசாரணையை முன்னெடுத்துச் செல்வதற்காக என்ஐஏ அதிகாரிகள் லக்னோ வந்தனர்.

இதனிடையே போபால் உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக அட்டிஃப் முஜாஃபர் என்கிற அல்-காசிம் உள்ளிட்ட 3 பேரை மத்தியப் பிரதேச போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று கூறும்போது, “இவர்கள் மூவரும் லக்னோவில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் மூலம் செவ்வாய்க்கிழமை காலை போபால் வந்துள்ளனர். காலை 7.30 மணியளவில் பாசஞ்சர் ரயிலில் ஓர் இருக்கைக்கு மேல் உள்ள அலமாரியில் வெடிகுண்டு வைத்துள்ளனர். இதில் குழாய் வெடிகுண்டும், டைமர் கருவியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருக்கைக்கு கீழே குண்டு வைத்திருந்தால் அதிக சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் மேலே வைத்ததால் குறைந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சதிச் செயலில் ஈடுபட்ட அனைவரும் உ.பி.யை சேர்ந்தவர் கள். குண்டுவெடிப்புக்கு பிறகு அவர்கள் லக்னோ செல்ல திட்டமிட்டுள்ளனர்” என்றார்.

இவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில் போபால் உஜ்ஜைன் குண்டுவெடிப்பில் அல்-காசிம் என்பவர் மூளையாக செயல்பட்டதாக தெரியவந்துள் ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “அலிகர் நகரைச் சேர்ந்த இவர் இன்ஜினீயரிங் மாணவர். ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவாக, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ‘கொரசான் குழு’ செயல்படுகிறது. இதன் இந்தியப் பிரிவின் தலை வராக தன்னை அறிவித்துக் கொண்டவரே இந்த அல்-காசிம்” என்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை உ.பி.யின் கான்பூர் மற்றும் உன்னாவ் நகரில், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் நேற்று லக்னோ கொண்டு செல்லப்பட்ட னர். போபால் உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பில் இவர் களுக்கு தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உடலை ஏற்க பெற்றோர் மறுப்பு

உ.பி.யின் லக்னோவில் கொல்லப்பட்ட சைஃபுல்லா அதே மாநிலத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கான்பூரின் ஜஜமாவ் திலா பகுதியில் அவரது பெற்றோர் வசிக்கின்றனர். சைஃபுல்லாவின் தீவிரவாத தொடர்பு பற்றி அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜ் கூறும்போது, “சைஃபுல்லா எனது மகனே அல்ல. தேசவிரோத செயலில் ஈடுபடும் ஒருவன் எனது மகனாக இருக்க முடியாது. எங்களுக்கும் நாட்டுக்கும் சைஃபுல்லா இழுக்கு ஏற்படுத்தியுள்ளான். எனவே இறுதிச் சடங்குக்காக அவனது உடலை நாங்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார்.

சைஃபுல்லா பி.காம் பட்டதாரி. அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் இரண்டரை மாதங்களுக்கு முன் சைஃபுல்லா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

SCROLL FOR NEXT