பிஹார் மாநிலத்தில் கனமழை காரணமாக கோசி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுபுல் மாவட்டத்தில் 50 கிராமங்களை நீரில் மூழ்கடித்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இன்னும் நூற்றுக்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
சுபால் மாவட்டம் கோகாரியா கிராமத்தில் 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“கோசி நதியில் கடந்த இரு நாட்களாகவே வெள்ளம் பெருக்கெடுத்து, 6 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுபுல் மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பிஹார் மற்றும் நேபாளத்தில் மழை நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் கோசி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க அரசு ஊழியர்கள் தயாராக இருக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது” என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ல், கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 30 லட்சம் மக்கள் வீடிழந்து தவித்தது நினைவு கூரத்தக்கது.