இந்தியா

கான்பூரில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் பலி; காயம் 18

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கான்பூரில் உள்ள ஜஜ்மார் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இக்கட்டிடம் உத்தரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதியின் கான்பூர் தலைவர் மெகதாப் ஆலம் என்பவருக்கு சொந்தமானது.

இக்கட்டிடத்தில் 7-வது மேல் தளம் கட்டப்பட்டு வந்தது. இதற்கு அரசு அனுமதி பெறவில்லை என கான்பூர் வளர்ச்சி ஆணையம் சார்பில் கடந்த வருடம் நவம்பர் 26-ல் மெகதாப் ஆலமிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளிக்காத ஆலம் கட்டிடப்பணியை தொடர்ந்தார். இதனால், டிசம்பர் 26-ல் கான்பூர் வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை (வியாழக்கிழமை) அந்த கட்டிடம் திடீர் என இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுமார் 30 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அவர்களில் 20 பேர் இது வரை மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் படுகாயம் அடைந்த மேலும் இருவர் பலியாகினர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் உரிமையாளர் மீது கான்பூர் வளர்ச்சி ஆணையம் சார்பில் அப்பகுதியான சகேரி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதில், தம் ஆணையத்தால் வைக்கப்பட்ட சீலை சட்டவிரோதமாக உடைத்து கட்டிடப்பணியை ஆலம் தொடர்ந்து வந்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால், ஆலம் மீது இபிகோ- 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீஸாரை தேடி வருகின்றனர். இவருடன் சேர்த்து அவரது கட்டிடக் காண்ட்ராக்டரும் போலீஸாருக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர்.

இந்த சம்பவம் மீது கான்பூர் வளர்ச்சி ஆணையம் சார்பில் 7 நாட்களில் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் அனைவரும் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஆவர்.

SCROLL FOR NEXT