இந்தியா

தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றுவதில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

பிடிஐ

அரசியல் கட்சிகளின் வாக்குறுதி களும், தேர்தல் அறிக்கைகளும் வாக்குப்பதிவு வரை மட்டுமே நீடிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் வேதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் விவகாரங்களுடன் கூடிய பொருளாதார சீர்திருத்தங் கள் என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். அவரது முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பேசியதாவது:

அரசியல் கட்சிகள் விடுக்கும் தேர்தல் அறிக்கைகள் சமீப காலங் களாக வெற்று காகிதங்களாக மாறி வருகின்றன. இதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் எம்.பி., எம்எல்ஏக் களிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற காரணத்தை கூறி அரசியல் கட்சிகள் வெகுசுலபமாக கைவிரித்து விடுகின்றன. குடிமக்களும் தேர்தலுடன் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த வசதியாகி விடுகிறது.

இலவச திட்டங்களுக்கு எதிராக விதிகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT