இந்தியா

வேகமெடுக்கும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விரைவில் தீர்ப்பு?

இரா.வினோத்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை புதிய நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி டி'குன்ஹா.

விசாரணையின்போது நீதிபதி டி'குன்ஹா,' தாம் புதிதாகப் பொறுப்பேற்றிருப்பதால் வழக்கறிஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ளுமாறு பணித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்குக்குப் பதில், அவரது உதவியாளர் மஞ்சட்டி ஆஜரானார்.

வழக்கின் சுருக்கம்

இவ்வழக்கின் முன் கதையை மிகவும் சுருக்கமாக கூறுமாறு நீதிபதி டி'குன்ஹா ஜெயலலிதாவின் வழக்குரைஞர் பி.குமாரிடம் கேட்டார்.அதே நேரம் இந்த விளக்கம் வழக்கின் விசாரணையில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் கூறினார். ஆனால், ஜெயலலிதாவின் வழக்குரைஞர் பி.குமார், 'இவ்வழக்கு ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே தொடுக்கப்பட்டுள்ளது என அரை மணி நேரத்திற்கும் மேலாக அனைத்தையும் விலாவாரியாக விவரித்தார்.

திமுகவின் மனு ஏற்பு

இதனைத்தொடர்ந்து பேசிய க.அன்பழகனின் வழக்குரைஞர் தாமரைச்செல்வன்,'' நல்லம்ம நாயுடுவை மறுவிசாரணை கோரும் மனு மற்றும் சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள அசையும் சொத்துகளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவருவது தொடர்பான 2 மனுக்களை, வழக்கின் இறுதிக்கட்ட விவாதத்தை விசாரிப்பதற்கு முன்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி'குன்ஹா, அம்மனு மனு மீதான விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

4 வாரம் அவகாசம்

இதற்கிடையே, பவானி சிங்கை மாற்றக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் க.அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு வெள்ளிக்கிழமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி போபண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அன்பழகனின் மனுவிற்கான பதில் மனுவை 4 வாரத்திற்குள் பவானி சிங் தாக்கல் செய்ய வேண்டும்''என நீதிபதி போபண்ணா உத்தரவிட்டார்.

விரைவில் முடிக்கத் திட்டம்

கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கை விரைவில் முடிக்குமாறு புதிய நீதிபதி டி'குன்ஹாவிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.இதனால் இவ்வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணாவையும், மல்லிகார்ஜூனையாவையும் சந்தித்து வழக்கு குறித்து, அவர் ஆலோசனை நடத்தி வருவதாக சிறப்பு நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT