இந்தியா

தொண்டு நிறுவனங்கள், அதன் உயர் அதிகாரிகள்: ஆண்டு வருமான விவரங்களை லோக்பால் அமைப்பில் சமர்ப்பிக்க உத்தரவு

பிடிஐ

அரசுத் துறையில் ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி லோக்பால் சட்டம் கொண்டுவரப் பட்டது. இதில் சில திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இன்னும் லோக்பால் அமைப்பு நிறுவப்படவில்லை.

எனினும், இந்த சட்டத்தின்படி ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது (குடும்பத்தினர்) ஆண்டு வருமானம், சொத்து பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை சமீபத்தில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதில், அரசிடமிருந்து ரூ.1 கோடிக்கு மேலும் வெளிநாடுகளிடமிருந்து ரூ.10 லட்சத்துக்கு மேலும் நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களும் (சங்கங்கள், அறக்கட்டளைகள்) லோக்பால் வரம்புக்குள் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஊழலில் ஈடுபட்டால், லோக்பால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த புதிய விதியின்படி, தொண்டு நிறுவனங்களின் இயக்குநர்கள், செயலாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பொது ஊழியர்களாகக் கருதப்படுவார்கள். எனவே, இவர்களும் ஆண்டுதோறும் தங்களது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை லோக்பால் அமைப்பிடம் தாக்கல் செய்ய வேண்டும். நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் லோக்பால் சட்டத்தின் கீழ் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், தனியார் நிறுவனங்கள் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஊழல் எதிர்ப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT