உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று அலகாபாத்தில் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உ.பி. பேரவைத் தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து கட்சியின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது, “அலகாபாத் நகரம் நாட்டின் அரசியல் மையப் புள்ளியாக விளங்குகிறுது. அத்துடன் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, வி.பி.சிங் உள்ளிட்ட பிரபலமான அரசியல் தலைவர்கள் இங்குதான் பிறந்தார்கள்.
எனவே, உ.பி.யில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நகரில் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்த உள்ளோம். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்ததற்கு மிகவும் உதவியாக இருந்தது உத்தரப் பிரதேசம்தான்” என்றார்.
கட்சியின் துணைத்தலைவர் மற்றும் மாநில பொறுப்பாளர் ஓம் மாத்தூர் கூறும்போது, “இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதேநேரம் உ.பி. பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்” என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் வரும் பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் உற்சாகமாக உள்ளனர். இதனாலேயே அலகாபாத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை வரவேற்கும் விதமாக கட்சியின் சார்பில் பேனர்கள், போஸ்டர்கள் என நகர சாலைகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பாதுகாப்பு ஏற்பாடு களும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கூட்டம் முடிந்ததும் திங்கள்கிழமை மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.