ரயில்வே இடைக்கால பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் கூடுதல் ரயில்கள், புதிய வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை அந்தத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தாக்கல் செய்கிறார்.
இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதி ரயில்வே பட்ஜெட், அமைச்சர் கார்கேவின் முதல் ரயில்வே பட்ஜெட் ஆகும்.
பயணிகள் கட்டணம் உயராது
“ரயில்வே துறையின் வருவாய் குறைந்துள்ள போதிலும் இடைக்கால பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்காது, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட்டாக இருக்கும்” என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ரயில்வே வழித்தடங்களை மின்மயமாக்குவது குறித்த அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் வெளியாகக்கூடும். அதன்படி அடுத்த நிதியாண்டில் 1500 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.