வியன்டியான் குறிப்பிட்ட ஒரு நாடு (பாகிஸ்தான்) தீவிரவாதத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
லாவோஸ் தலைநகர் வியன்டியானில் நேற்று நடைபெற்ற கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையொட்டி ஆசியான்-இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு மோடி கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:
நமக்கு அருகில் இருக்கும் ஒரு நாடு (பாகிஸ்தான்) தீவிரவாதத்தை உற்பத்தி செய்து அதனை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இது சர்வதேச சமூகத் தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத் தலாக உள்ளது. அந்த நாட்டை தனிமைப்படுத்தி பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.
தீவிரவாதம் தேச எல்லைகளைக் கடந்து ஒரே நேரத்தில் அனைத்து திசைகளில் இருந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதற்கு ஆசியான் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோடி-ஒபாமா சந்திப்பு
ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இந்தியா வில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒபாமா பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிகிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட ஒபாமா, நானும் எனது மனைவியும் தாஜ்மஹாலை காண ஆவலுடன் உள்ளோம் என்று தெரிவித்தார்.
சீன பிரதமருடன் சந்திப்பு
ஆசியான் மாநாட்டில் சின பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசி னார். அப்போது இரு நாடுகளும் அவரவர் விருப்பங்கள், நோக்கங் களுக்கு பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். சீனா- பாகிஸ்தான் வர்த்தக சாலை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாகச் செல்வது குறித்து லீ கெகியாங்கிடம் மோடி கவலை தெரிவித்தார்.
மியான்மர் சுதந்திரப் போராட்ட தலைவர் ஆங் சான் சூச்சி, தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹையின் ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசினார்.