இந்தியா

நவாஸ் ஷெரீபை சந்திக்க பிரதமர் முடிவு - ஓமர் அப்துல்லா வரவேற்பு

செய்திப்பிரிவு

திட்டமிட்டபடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் நியூயார்க்கில் பேசுவது என மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.

ஸ்ரீநகர் அருகே அமையவுள்ள புதிய மேம்பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சனிக்கிழமை பங்கேற்றுப் பேசுகையில் ஒமர் கூறியதாவது: இரு தலைவர்களும் நியூயார்க்கில் பேச்சு நடத்துவதை விரும்பாத சக்திகள், அதைத் தடுத்து நிறுத்திட ஜம்முவில் போலீஸ் நிலையம் மீதும் ராணுவ முகாம் மீதும் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர். அதற்கு பணிந்து கொடுக்காமல் திட்டமிட்டபடி நவாஸை சந்தித்துப் பேசுவது என மன்மோகன் சிங் உறுதியாக உள்ளது வரவேற்கத்தக்கது. பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்த பயங்கரவாதிகள் கையாண்ட சதி வெற்றி பெறவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண துப்பாக்கி ஏந்துவது பலன் தராது. நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அரசியல் சார்ந்தவை. அவற்றை அரசியல் வழியில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.

நியூயார்க்கில் நவாஸ் ஷெரீபும் மன்மோகன் சிங்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இதன் மூலமாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையில் நட்புறவு மலர வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாகிஸ்தானில் தேர்தல் முடிந்த பிறகு இருநாடுகளின் பிரதமர்கள் நிலையில் முதல் முறையாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அரசியல் ரீதியாகவோ, வேறு வழிகளின் மூலமாகவோ பேச்சு வார்த்தையை தடுத்து நிறுத்த முயற்சி நடைபெறுகிறது. இது ஈடேற விடக்கூடாது.

கடந்த காலங்களில் இது போன்று தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தால் பேச்சு வார்த்தை நடைபெறாமல் நின்றுவிடும். இப்போதும் அதுபோலவே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக, அதை நிறுத்த முயற்சி மேற்கொண்டு ஜம்முவில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்தினால்தான் தமது தரப்பு கவலைகளை முன் வைக்கமுடியும். நவாஸுடன் தேன்சொட்ட மன்மோகன் சிங் பேசவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஒரே சந்திப்பில் எல்லா விஷயங்கள் பற்றியும் பேசி தீர்வு கண்டுவிட முடியாது என்பது தெரிந்ததுதான்.

இரு தலைவர்களும் இப்போது பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று சொல்பவர்கள் (பாஜகவை மறைமுகமாக குறி்ப்பிட்டு) தாம் பதவியில் இருந்தபோது என்ன செய்தோம் என்பதை சீர்தூக்கிப் பார்க்கட்டும். ஸ்ரீநகருக்கு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வந்தபோது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நட்புக்கரம் நீட்டினார் என்பதை மறந்து விடக்கூடாது.

இப்போது நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை வெற்றி பெற முழு மனதுடன் ஆதரவு தரவேண்டும். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் முன்புபோல் இப்போது அதிக அளவில் நிகழ்வது இல்லை.

இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் பகைமை உணர்வை நட்புறவாக மாற்றக்கூடிய மன வலிமையை நவாஸுக்கும் மன்மோகன் சிங்குக்கும் இறைவன் வழங்க அனைவரும் பிரார்த்திப்போம் என்றார் ஒமர் அப்துல்லா.

ஜம்முவில் வியாழக்கிழமை பாகிஸ்தான ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் போலீஸ் நிலையம் மீதும் ராணுவ முகாம் மீதும் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT