காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பாஜக மூத்த தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலைமை ஆணையர் வி.எஸ். சம்பத்தை திங்கள்கிழமை நேரில் சந்தித்து காங்கிரஸின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள 6 பக்க புகார் மனுவில் பாஜக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி ராஜஸ்தானின் சுரு மற்றும் கேர்லியில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசினார். அப்போது, பாஜக தலைவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். இதன்மூலம் பல்வேறு சமூகத்தினரிடம் மதவாதத்தை தூண்டியுள்ளார்.’ எனக் கூறி அதற்கு ஆதரமாக டிவி சேனல்களின் வீடியோ மற்றும் பத்திரிகை செய்திகளை பாஜக தலைவர்கள் சமர்ப்பித்துளனர்.
இந்த மனுவில், தேர்தல் விதிகளின்படி, எந்த ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளர்களோ ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் இருதரப்பினர் இடையே பேதங்களை கிளப்பும் வகையில் பேசக்கூடாது எனவும், ஆதாரமில்லாத புகார்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் உள்ள தேர்தல் விதிமுறைகளை கோடிட்டுக் காட்டியுள்ளனர். இவற்றை ராகுல் மீறியுள்ளதாகக் குறிப்பிட்டு அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய சட்டம் 1968, 16ஏ கூறுவதை குறிப்பிட்டு, அதன்படி காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர். காங்கிரஸ் இதுவரை, அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதை மறுக்கவில்லை என்பதையும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி, ‘தேர்தல் விதிமுறைகளை காலம், காலமாக காங்கிரஸ் மீறுவது வழக்கமாகி விட்டது. இதுபோல் பேச ராகுல் காந்தி ஒன்றும் திக்விஜய்சிங் அல்ல. அவர் காங்கிரசின் சூப்பர் ஸ்டார் பிரசாரகர்’ என கிண்டலடித்தார்.
இவர்களுடன் சென்று புகார் அளித்த பாஜகவின் சட்டப்பிரிவுத் தலைவரான சத்யபால் ஜெயின், இதற்காக ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்ம் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.