இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே வீட்டில் பணியாற்றிய பெண் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் உளவாளியாக இருக்கலாம் என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான உத்தம் கோப்ரகடே இது தொடர்பாக மேலும் கூறியது: எனது மகள் மீது கூறப்பட்டுள்ள விசா மோசடி குற்றச்சாட்டுக்குப் பின், பெரிய சதி வேலை உள்ளது. அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். எனது மகளிடம் பணியாற்றிய சங்கீதா ரிச்சர்ட் சிஐஏ-வின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எனது மகள் மீதான தவறான குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும்.
தேவயானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு காரணமான சங்கீதா ரிச்சர்ட் சிஐஏ உளவாளி என்ற கோணத்தில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய துணைத் தூதர் தேவயானியை, கடந்தவாரம் விசா மோசடி குற்றச்சாட்டில் கைது செய்த அமெரிக்க போலீஸார், அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். இது அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நாள்தோறும் வெவ்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.