இந்தியா

உ.பி.யில் இறைச்சிக் கூடங்கள் மீது கட்டுப்பாடு எதிரொலி: மேற்கு வங்கத்துக்கு மாறும் தோல் பதனிடும் ஆலைகள்

செய்திப்பிரிவு

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு அம்மாநிலத் தில் இறைச்சிக்கூடங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுள்ளன. இதனால் அம் மாநிலத்தில் உள்ள தோல் பதனிடும் ஆலைகள் மேற்கு வங்கத்துக்கு இடம்பெயர உள்ளன.

உ.பி.யில் இறைச்சிக்கூடங்கள் மீது சில நடவடிக்கைகள் எடுக்கு மாறு அம்மாநில அரசுக்கு கடந்த 2015 மற்றும் 2016-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அப்போதைய அரசு, அரசியல் காரணங்களுக்காக இதை கண்டுகொள்ளாமல் விட்டது.

ஆனால் இந்த உத்தரவு கள் மீது, யோகி அதித்யநாத் தலைமையிலான புதிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உ.பி.யில் எருமை மற்றும் ஆட்டின் இறைச்சி தினமும் சுமார் 35 லட்சம் கிலோ விற்பனை செய்யப்படுவதாக மதிப்பிடப்பட் டுள்ளது.

வெட்டப்பட்ட இந்த கால்நடை களின் தோல் பதனிடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உ.பி.யில் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை பாஜக அரசு மூடியது.

மற்றவற்றின் மீது கடும் விதிகளை அமல்படுத்தி வரு கிறது. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் தோல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதை சமாளிக்க உ.பி.யில் 20-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் ஆலைகள் மேற்கு வங்கத்துக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றன.

இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி.யின் கான்பூர் தோல் பதனிடும் தொழிலதிபர்கள் வட்டாரம் கூறும்போது, “இந்தியாவின் தோல் மற்றும் தோல் பொருட்களில் 70 சதவீதம் கான்பூர் மற்றும் சென்னையிலிருந்து ஏற்றுமதியா கிறது. இங்குள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களின் படி தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் தோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு யோகி ஆதித்யநாத் அரசு தரும் நெருக்கடி முக்கியக் காரணம் ஆகும். மேற்கு வங்கத்தின் பண்டாலா பகுதியில் சுமார் 970 ஏக்கர் பரப்பளவில் தோல் தொழிற்பேட்டை செயல் படுகிறது. இங்கு புதிய தோல் பதனிடும் ஆலைகள் அமைக்க முயற்சிக்கப்படுகிறது.

இதில் சென்னையின் இரு பெரிய தொழிலதிபர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் மூலமாக மேற்கு வங்கத்தின் நிதி மற்றும் தொழில்துறை அமைச்சர் அமித் மித்ராவை சந்தித்துப் பேசியுள்ளனர். ரூ.1,000 கோடி முதலீட்டிலான இந்த தொழிற் சாலைகள் மூலம் ஆயிரக்கணக் கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையம் சர்வதேச தரம் வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. இதையே மேற்குவங்கத்திலும் நிறுவ இருப்பதாக அம்மாநில அரசிடம் விளக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் மாநிலத்தில் புதிய தோல் பதனிடும் அமைக்க மேற்கு வங்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தை சேர்ந்த சில நிறுவனங்களும் தங்கள் கிளை ஆலைகளை பண்டாலாவில் தொடங்க திட்டமிட்டு வருகின்றன. பண்டாலாவில் தற்போது 39 தோல் தொழிற்சாலைகள், 324 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

SCROLL FOR NEXT