சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், சட்டத்தில் இருந்து தான் தப்பிக்க முயற்சிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்று நடக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லக்நோவில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால், அவர் அங்கு இல்லை.
இதனையடுத்து, சுப்ரதா ராய் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை மறுத்த சுப்ரதா ராய், ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தனது தாயருக்கு உடல் நலன் சரியில்லாததால், மார்ச் 3-ஆம் தேதி வரை தனது தாயாருடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் வெள்ளிக்கிழமை (இன்று) நேரில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.