இந்தியா

ரூ.5 கோடிக்கு ஏலத்துக்கு வரும் எருமை: ஃபேஸ்புக், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம்

செய்திப்பிரிவு

முர்ரா ரக எருமைகள் பால்வளத் துக்குப் புகழ்பெற்றவை. சிறந்த பாரம்பரியமும், இனப்பெருக்க வளமும் கொண்ட எருமைக் கிடாக்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை போகின்றன. இவற்றின் விந்துகளை விற்பனை செய்வதன் மூலம் அதன் உரிமையாளர்கள் ஏராளமாக வருவாய் ஈட்டுகின்றனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டம் கோரி தவிரி ஊராட்சியைச் சேர்ந்தவர் நரேஷ் சோனி (44). நகைக்கடை உரிமை யாளரான இவர் ஹிமாச்சலி ரஞ்சா என்ற 30 மாத முர்ரா ரக எருமைக் கிடாவை வளர்த்து வருகிறார்.

சுமார் 1,000 கிலோ எடையும், 13 அடி நீளமும், 5.8 அடி உயரமும் கொண்ட இதனை அவர் வரும் வெள்ளிக்கிழமை ஏலம் விடவுள்ளார். இதற்கு ரூ.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலம் குறித்த தகவல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் வெளியிடப்பட்டுள்ளன.

நரேஷ் சோனி கூறும்போது, “ஹரியாணா மாநிலம் குருசேத் திரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற எருமைக் கிடா ரூ.9 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது ஹிமாச்சலி ரஞ்சா ரூ.5 கோடிக்கு ஏலம் போகும் என நினைக்கிறேன்” என்றார்.

ஹிமாச்சலி ரஞ்சாவுக்கு தினமும் வழக்கமான தீவனங் களுடன் ஏராளமான ஆப்பிள்கள், 2.5 கிலோ சோயாபீன், 2.5 கிலோ கொண்டைக் கடலை, 10 கிலோ மாட்டுத்தீவனம், ஒரு கிலோ நெய் உணவாக அளிக்கப்படுகிறது. தவிர, அதன் மேனி பளபளப்பாக இருப்பதற்காக தினமும் 2 லிட்டர் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படுகிறது. இதன் பராமரிப்புக்காக தினமும் சராசரியாக ரூ.1,500 செலவாகிறது. ஏலத்தின் சிறப்பம்சமாக, ரஞ்சா இன்னும் உடலுறவில் ஈடுபடவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க, பிலாஸ்பூர் எம்எல்ஏ. பாம்பெர் தாகூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சோனி அழைப்பு விடுத்துள்ளார். ரூ.5 கோடி விலை மதிப்புடையை எருமை ஏலம் விடப்படுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக எம்எல்ஏ தாகூர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT