பாஜக உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சியை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சதி செய்வதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பவன் பாண்டேவுக்கு ஆதரவு திரட்டி நேற்று அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜகவை எதிர்த்து போராடுவது மாயாவதியின் நோக்கம் அல்ல. சமாஜ்வாதி கட்சி வளராமல் முடங்க வேண்டும் என்பதே பகுஜன் சமாஜ் மற்றும் பாஜகவின் விருப்பம். பாஜகவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. மீண்டும் அந்த கட்சியுடன் ரக்்ஷா பந்தன் கொண்டாடுவார் மாயாவதி.
உத்தரப்பிரதேசம் வளர்ச்சி அடையவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி புகார் கூறுகிறார். அப்படி அவர் சொல்வது உண்மையென்றால் அதுபற்றி அவர் என்னுடன் விவாதத்துக்கு வந்து பேசட்டும்.
இப்போதெல்லாம் மாயாவதி பெரிய அளவில் உரை நிகழ்த்து கிறார். மாநிலத்தின் வளர்ச்சி பற்றி யெல்லாம் மணிக்கணக்கில் பேசு கிறார். முன்பு மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அதை பயன்படுத்திக்கொள்ளாமல். யானை சிலைகளை அமைப் பதைத்தான் அவர் செய்தார்.
கடந்த முறை பாஜகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகள் சென்றதால் பாஜக அதிக அளவில் மக்களவைத் தொகுதிகளில் வென்று மத்தியில் ஆட்சியை அமைத்தது. பகுஜன் சமாஜ் விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சைக்கிளுக்கு (சமாஜ்வாதி சின்னம்) சின்ன இடம் போதும், யானை (பகுஜன் சமாஜ் கட்சி சின்னம்) வீட்டில் நுழைந்தால் எல்லாம் நசுங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.