உத்தரப் பிரதேசத்தில் பசுவைத் திருட முயன்றதாக 4 பேரை பிடித்து பஜ்ரங் தளம் தொண்டர் கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குஜராத்தின் உனா மாவட்டத்தில் தோலுக்காக பசுவைக் கொன்றதாக தலித் இளைஞர்களை பசுப் பாதுகாவலர்கள் அடித்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தலித் சமூகத்தினரின் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரின் புற நகரில் அமைந்துள்ள ஜிரோலி கிராமத்தில் பஜ்ரங் தளம் மாவட்ட தலைவர் கேதார் சிங் தலைமையில் திரண்ட தொண்டர்கள், நேற்று எருமை மாடுகளை ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் ஓட்டுநர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதை யடுத்து சிறிது தொலைவில் நின்றிருந்த மற்றொரு தொண்டர் கள் கும்பல் உடனடியாக சாலையை மறித்து அந்த வாக னத்தை நிறுத்தும்படி வற்புறுத்தி யது. இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு 4 பேரும் தப்பியோடி னர். எனினும் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று சரமாரியாக தாக்கியது. பின்னர் வாகனத்துடன் அந்த 4 பேரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த 4 பேரும் கிராமத்தில் இருந்த கால்நடைகளை வாகனத்தில் திருடிச் செல்ல முயன்றதாக போலீஸாரிடம் பஜ்ரங் தளம் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.