காஷ்மீரில் யூரி ராணுவ முகாமில் இந்திய வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் கலைஞர்கள் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் நடிகர்கள் தங்களின் நடிப்புத் தொழிலை நிறுத்திக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் எனவும், முதலில் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி கூறியிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அனுபம் கேர், ''பாகிஸ்தான் கலைஞர்கள் இந்திய வீரர்களின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் அதைச் செய்யவேண்டும். அதற்காக அவர்களின் நாட்டையே விமர்சிக்கச் சொல்லவில்லை.
இந்தியர்களாகிய நாம் எப்போதும் அவர்களிடம் நட்பாகத்தான் இருந்து வருகிறோம். பாகிஸ்தான் கலைஞர்களில் சிலர் சிறந்த திறமை உடையவர்கள். ஆனால் என்னுடைய நாடு, என் வீரர்கள் என்றுவரும்போது என்னால் வேறு மாதிரியாக யோசிக்க முடியாது. எப்போதும் என் நாட்டைச் சார்ந்துதான் இருப்பேன்'' என்று அனுபம் கேர் கூறியுள்ளார்.
2014-ல் பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் தாக்கப்பட்டதைக் கண்டித்துத் தீவிரவாதிகளுக்குக் கடிதம் எழுதியவர் அனுபம் கேர் என்பது குறிப்பிடத்தக்கது.