முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சிறு பிழைகள் செய்யும் நேர்மையான அதிகாரிகளை தண்டனைக்கு உட்படுத்தக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய ஊழல் கண்க்காணிப்பு ஆணையத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது:
"முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சிறு பிழைகள் நேர வாய்ப்பிருக்கிறது. சிறு பிழைகளுக்காக அதிகாரிகளை தண்டிக்கக் கூடாது. அவ்வாறு தண்டித்தால் அது நிர்வாகத் துறையை முடக்கும் முயற்சியாகிவிடும். இதனால் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமலேயே போகலாம்.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கூறியது போல், ஊழல் கண்காணிப்பு ஆணையம் யாருக்கும் அஞ்சாத ஓர் அங்கமாகவும், ஊழல் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் காலச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் கண்டுள்ளது. முறையான விசாரணை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்ந்த நிர்வாகம் ஆகியனவற்றை சீர்தூக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற புதிய சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் ஊழல் குறித்து வெளிப்படையான விவாதங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களுக்கு ஒரு நன்மை விளைந்துள்ளது. மக்கள் தங்கள் உரிமைகள் என்ன என்பதை உணரத் தொடங்கியிருக்கின்றனர்.
அதே வேளையில், பொதுப் பணியில் இருப்பவர்களின் பொறுப்புகளின் வரம்பு என்ன என்பதையும் அறியத் துவங்கியுள்ளனர்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.