மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவர் 11 ஆண்டுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது கொலைக் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கை.
இந்த மூவர் தரப்பில் புதன்கிழமை ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, இந்த வழக்கை தாமதம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக சந்தேகிப்பதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மற்றொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு மத்திய அரசு தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை தலைமை நீதிபதி ப.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா குறிப்பிடுகையில், ‘‘மரணதண்டனை குற்றவாளி களின் கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் தண்டனையை குறைக்கலாம் என ஜனவரி 21ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது” என தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு தரப்பில் பிப்ரவரி 4ம்தேதி அட்டார்னி ஜெனரல் ஜி,இ.வாகன்வதி பதில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட தாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்கலாம் என்று வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 15 குற்றவாளிகளின் தூக்கு தண்ட னையை ஆயுளாக குறைத்து ஜனவரி 21ம்தேதி தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்பின் பலன் ராஜீவ் கொலையாளிகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் எண்ணம் என தெரிகிறது. எனவே அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிடுகிறது.
முருகன், சாந்தன் இருவரும் இலங்கை நாட்டவர். பேரறிவாளன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். முருகனின் மனைவி நளினிக்கும் மரண தண்டனை கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டால் அவரது தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.
தமது கருணை மனுக்களை 11 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய குடியரசுத் தலைவர் நிராகரித்ததை ஆட்சேபித்து 3 கொலைக்குற்றவாளிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் 2012 மே மாதம் தனது விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு உயர் நீதிமன்றம் 2011 ஆகஸ்ட் 30ம் தேதி தடை விதித்தது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்ட உச்ச நீதிமன்றம், கருணை மனு மீது முடிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதை வைத்து மரண தண்டனையை ஆயுளாக குறைக்க முகாந்திரம் இல்லை என்று கூறியது.
ஆனால், ஜனவரி 21ம் தேதி தீர்ப்பின்படி கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் தீவிரவாதிகளுக்கும் நிவாரணம் கிடைக்கக்கூடும். எனவே இந்த மனுக்கள் மீது புதிதாக விசாரணை தொடங்க உள்ளது.