இந்தியா

பாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: பெண் கொடுத்த புகாரில் டெல்லி போலீஸார் நடவடிக்கை

பிடிஐ

டெல்லியில் மின்வெட்டு தொடர்பான புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து டெல்லியின் தென்கிழக்கு சரக போலீஸ் இணை ஆணையர் ஆர்.பி.உபாத்யாய கூறும்போது, ‘‘கடந்த 22-ம் தேதி மாவட்ட நீதிபதி முன் பெண் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லாவின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு வாகனம் தன்னை மோத முயன்றதாகவும், அதில் அமனத்துல்லா அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டப்பிரிவு 308-ன் கீழ் அமனத்துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தோம். இது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவு என்பதால் அமனத்துல்லாவையும் கைது செய்தோம்’’ என்றார்.

தவிர மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக அமனத்துல்லாவின் வீட்டுக்கு சென்று முறையிட்டபோது, அங்கிருந்த இளை ஞரை ஏவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்றும் போலீஸாரிடம் தெரிவித்த புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அமனத்துல்லா கைது செய்யப்பட்டது குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் ‘ட்விட்டரில்’ ‘‘பிரதமர் நரேந்திர மோடி மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏவை கைது செய்துவிட்டார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் பொய் வழக்குகளை புனைந்து தலித்துகளை சிறைக்கு அனுப்பி வருகிறார். பிரதமர் மோடியோ டெல்லிவாசிகளை சிறைக்கு அனுப்புகிறார். இதை எதிர்த்து டெல்லியும், குஜராத்தும் ஒன்றாக போராடும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் அந்தப் பெண்ணை ஒருமுறைகூட சந்தித்தது இல்லை என்றும், தனது வீட்டுக்கும் அவர் வந்ததில்லை என்றும் அமனதுல்லா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT