இந்தியா

ராகுல் உயிருக்கு எப்போதுமே அச்சுறுத்தல் உள்ளது:சுஷில் குமார் ஷிண்டே

செய்திப்பிரிவு

காங்கிரஸ் துணைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் உயிருக்கு எப்போதைக்குமே அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித் துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.

இதைக் கருத்தில் கொண்டே அவரது பாதுகாப்புக்காக உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் ஷிண்டே.

பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலால் சமூக நல்லிணக்கம் சிதைந்துள்ளது. மக்கள் மனதில் வெறுப்பும் கோபமும் விதைக்கப் படுகிறது. எனது பாட்டி, தந்தைக்கு நேர்ந்த கதிபோல என்றாவது ஒரு நாள் தானும் கொல்லப்படலாம் என்று ராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உணர்ச்சி வயப்பட்டு பேசியிருந்தார் ராகுல்.

இதைச் சுட்டிக்காட்டி நிருபர்கள் வெள்ளிக்கிழமை கேட்ட கேள்விக்கு ஷிண்டே அளித்த பதில் விவரம்:

சமூகத்தில் வெறுப்பை வளர்த் திடும் அரசியல் நடத்தப்படுகிறது. இதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன என்பது பற்றி நாம் கவலைப்பட்டாக வேண்டும். இதை நற்சிந்தனை உடைய அனை வரும் அறிவார்கள். ராகுலுக்கு உள்ள அச்சுறுத்தல் உண்மையில் நிகழ்ந்து விட முடியாத வகையில் எல்லாவித முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார் ஷிண்டே.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் அண் மையில் வெடித்த வகுப்புக் கலவரத்தில் பாதிப்புக்குள்ளான வர்களை ஆசைகாட்டி பயங்கர வாதப் பாதைக்கு ஈர்த்திட பாகிஸ் தானைச் சேர்ந்த உளவு அமைப்பு கள் முயற்சிப்பதாக கூறப்படு கிறதே என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘இது பற்றி எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை’ என்றார் ஷிண்டே.

சீனாவிலிருந்து வியாழக்கிழமை தில்லி திரும்பும்போது விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங்கும், ராகுல் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேசியது பற்றி குறிப்பிடுகையில், அவருக்கு போதிய பாதுகாப்பு தரப்படும் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

-பி.டி.ஐ.

SCROLL FOR NEXT