இந்தியா

ஐ.எஸ். இயக்கத்தில் சேர ஆன்லைனில் ஆள்சேர்க்கை: புலனாய்வுத்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

ராஷ்மி ராஜ்புத்

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தில் இணைவதற்காக இராக் சென்ற இளைஞரிடமிருந்து தேசிய புலனாய்வுத்துறைக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள தானே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆரிஃப் மஜீத், ஃபகத் ஷேக், அமான் தந்தல், சஹீம் தன்கி ஆகியோர் இராக்கில் இஸ்லாமிய தனி நாடு அமைக்கும் நோக்கத்தோடு போரிடும் ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக இந்தியாவை விட்டு வெளியேறினர். இதில் >ஆரிஃப் மஜீத் என்ற இளைஞர் மட்டும் நேற்று (நவம்பர் 28-ஆம் தேதி) தேசிய புலனாய்வுத்துறை மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முயற்சியினால் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் இராக்கிலிருந்து மீட்கப்பட்ட இளைஞர் ஆரிஃப் மஜீத்திடம் மும்பையில் தேசிய புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஐ.எஸ். இயக்கத்துக்கான ஆள்சேர்க்கை குறித்த முக்கிய தகவல்கள் புலனாய்வுத்துறைக்கு கிடைத்துள்ளன.

"ஐ.எஸ். இயக்கத்தினர் இணையத்தின் மூலம் என்னைத் தொடர்பு கொண்டனர்" என்று ஆரிஃப் கூறியுள்ளார்.

தேசிய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இராக்கில் உள்ள துணைத் தூதரகத்தை தொடர்புகொண்ட ஆரிஃப், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆரிஃபின் உடலில் 2 துப்பாக்கி தோட்டாக்கள் ஏற்படுத்திய காயங்கள் உள்ளன. ஆனால் அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பும்போது அவர் உண்மையான தகவல்களை அளிக்கவில்லை" என்றார்.

மேலும், ஆரிஃபை ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் இணையத்தின் வழியாக தொடர்புகொண்டுள்ளனர். ஆரிஃப் ஜிகாதிகளின் வரலாற்றை இணையத்தில் தேடிப் படித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் ஆரிஃபை இணையத்தின் வழியாக தொடர்புகொண்ட நபர் உள்ளூரில் இயங்கும் செல்ஃபோன் எண் ஒன்றை ஆர்ஃபிடம் வழங்கியுள்ளார். இதன் மூலம் இங்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆள்சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆரிஃபிடம், தேசிய புலனாய்வுத்துறையின் விசாரணை மும்பையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் 8 வரை விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆரிஃப் மீது தேசத்துக்கு எதிராக போர் நடவடிக்கை மற்றும் தடை செய்யப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரிஃப் மீதான இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT