அமெரிக்க கனவில் உள்ள ஐ.டி. பட்டதாரிகளை, ஸ்ரீநிவாஸ் மரணம் பெரிதாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க பயணம் மேற்கொள்வது கவலை அளித்தாலும், அங்கு கிடைக்கும் தாராளமான சம்பளத்தை யாரும் நிராகரிக்க முடியாது என்று ஒப்புக் கொள்கின்றனர்.
இதுகுறித்து எகலபையா பட்நாயக் என்பவர் கூறும்போது, “பாதுகாப்பா பணமா என்ற நிலை வரும்போது, இரண்டாவதுதான் எப்போதும் வெற்றி பெறும்” என்று ஐ.டி. பட்டதாரிகளின் சார்பில் கூறுகிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.டி. பட்டதாரிகள் அமைப்பின் உறுப் பினர் கூறும்போது, “ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டது துரதிருஷ்ட வசமானது. அவருடைய மரணம் எங்களை பெரிதும் பாதித்துள்ளது. எங்களில் ஒருவரை இழந்த மனநிலையில் இருக்கிறோம். இதனால் ஒருவித பயம் மனதை கவ்வினாலும், அமெரிக்காவில் வேலை செய்ய முதல் வாய்ப்பு வரும்போது அதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுடைய எதிர்காலமே அதில்தான் அடங்கி இருக்கிறது” என்றார்.
மேலும் ஐ.டி. இளைஞர்கள் கூறும் போது, “இந்தியாவில் ஐ.டி. படித்து 10 ஆண்டு அனுபவம் உள்ள ஒருவர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். ஆனால், அமெரிக்காவில் வேலை செய்தால் ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இது ஒன்றும் புதிதல்ல” என்று கணக்கு சொல்கின்றனர்.
கன்சாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு ஹைதராபாத் சாப்ட்வேர் என்டர் பிரைசஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ரமேஷ் லோகநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் கூறும்போது, “இதுபோன்ற சம்பவம் ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாக இதுபோல் நடந்து வருகிறது. எனினும், இங்கிருந்து அமெரிக்கா செல்லும் தொழில்நுட்ப பணியாளர்களையோ, படிக்க செல்லும் மாணவர்களையோ அது பாதிக்கவில்லை” என்றார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐ.டி. நிபுணர் பவன் கோமராகிரி கூறும்போது, “அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்கள் அச்சத்தில் உள்ளது உண்மை. என் சகோதரர் டல்லாஸில் இருந்து கிளவ்லேண்ட்டுக்கு சமீபத்தில் மாற்றலாகி சென்றார். அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ‘உன் நாட்டுக்கு திரும்பி போ’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது. போனிலும் மிரட்டல் விடுத்துள்ளனர். சாலையில் செல்லும் போதும் சிலர் அவமானப்படுத்தி உள்ளனர். டல்லாஸில் உள்ள இந்தியர்கள் பலருக்கும் இதுபோல் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வந்துள்ளன” என்றார்.