முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிரணாப் பங்கேற்றார்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இருவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ட்விட்டரில் ராகுல் கருத்து
இது குறித்து ட்விட்டரில் ராகுல், ''என் தந்தையை இன்று நினைவு கூர்கிறேன். அன்பு, இரக்கம், இதயத்தின் ஆழமான பெருந்தன்மை ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு தலைவர் அவர். நாங்கள் அவரை இழந்துவிட்டோம்'' என்று கூறியுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் டிருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதியால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 1984 அக்டோபர் 31-ம் தேதி முதல் 1989-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வரை ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்துள்ளார்.