ஜம்முவில் கத்துவா மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 1-ம் தேதி முதல், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் 8 பேர் பலியாகியுள்ளனர். 13 ராணுவ வீரர்கள் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுதவிர எல்லையோரத்தில் உள்ள 113 கிராமங்களில் இருந்து 30,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், கத்துவா மாவட்ட நிர்வாகம் ( மிஷன் ஹிஃபாசத்) 'Mission Hifazat' என்ற ஒரு திட்டத்தை கடந்த 6-ம் துவக்கியது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வரும் எல்லை கிராம மக்களை பாதுகாப்பான இடங்குளுக்கு வெளியேற்றுவதே இத் திட்டத்தின் நோக்கம்.
இதன்படி பல்வேறு கிராமங்களிலிருந்து வெளியேறிய 10,000 கிராமவாசிகள் ராணுவ நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கால்நடைகளுக்கான பராமரிப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.