இந்தியா

உ.பி. தேர்தலில் 6 தொகுதிகளில் யோகி ஆதித்யநாத் அமைப்பு பாஜகவுக்கு எதிராக போட்டி

பிடிஐ

உ.பி.யின் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் 5-வது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆதித்யநாத். நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலுக் கான பாஜக நட்சத்திர பிரச்சாரகர் களில் ஒருவராகவும் உள்ளார்.

இந்நிலையில், ஆதித்யநாத் தலைமையிலான ஹிந்து யுவ வாஹினி அமைப்பு (எச்ஒய்வி), குஷிநகர், கோரக்பூர், மகாராஜ்கஞ்ச் ஆகிய கிழக்கு மாவட்டங்களுக்குட்பட 6 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

இந்தத் தகவலை அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் சுனில் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சில தொகுதிகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக சார்பில் ஏற்கெனவே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், எச்ஒய்வி அமைப்பின் இந்த செயல் பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ஆதித்யநாத் கூறும் போது, “வேட்பாளர்களை நிறுத்தும் முடிவில் எனக்கு தொடர்பு இல்லை. எச்ஒய்வி அமைப்பு சமூக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலில் ஈடுபட விரும்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பாஜக சார்பில் யோகி ஆதித்ய நாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் கோரினர். இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும் ஆதித்யநாத் பரிந்துரை செய்த 10 பேரில் 2 பேர் மட்டுமே வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றனர். இதனால் அதிருப்தி யடைந்த அந்த அமைப்பினர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படு கிறது.

SCROLL FOR NEXT