இந்தியா

தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு வந்த 3 சீன பத்திரிகையாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

ஐஏஎன்எஸ்

தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு வந்த 3 சீன பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஸின்குவா. இந்நிறுவனத்தின் சார்பில் வூ கியாங் என்பவர் டெல்லியிலும், லூ டாங் என்பவர் மும்பையிலும், ஷி யாங்காங் என்பவர் மும்பை நிருபராகவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக உளவுப் பிரிவினர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் ஜூலை 31-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுடைய விசா கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. அதன்பின் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உளவுத் துறை தகவலின் அடிப்படையில் 3 பேரையும் வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சீன பத்திரிகையாளர்கள் 3 பேரை வெளியேற்றுவதாக இந்த நட வடிக்கையை எடுத்துக் கொள்ள கூடாது. அவர்கள் வேண்டாத வேலைகளில் ஈடுபட்டதால் தாய் நாட்டுக்கு திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர் களுக்குப் பதில் வேறு 3 பத்திரிகை யாளர்களை சீன அரசு செய்தி நிறுவனம் ஸின்குவா இந்தியாவுக்கு அனுப்பலாம் என்று கூறி யிருக்கிறோம்’’ என்றார்.

சீன பத்திரிகையாளர்கள் வெளியேற இந்திய அரசு உத்தர விட்டுள்ள தகவலை ஸின்குவா செய்தி நிறுவனமும் நேற்று உறுதி செய்தது. இதுகுறித்து ஸின்குவா நிறுவனம் சார்பில் டெல்லியில் ஏற்கெனவே பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும் போது, ‘‘இந்த தகவல் உண்மைதான். ஆனால், எதற்காக 3 சீன பத்திரிகையாளர்களை இந்தியா திருப்பி அனுப்புகிறது என்று தெரியவில்லை’’ என்றார்.

எனினும், இதுகுறித்து வேறு எந்த தகவலையும் உடனடியாக அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு மூன்று சீன பத்திரிகையாளர்கள் சென்று வருவதாக உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT